அரசாங்க வருவாயை உயர்த்துவதற்கான ஒரே தீர்வு வரிகளை உயர்த்துவது மட்டுமல்ல. வருவாயை அதிகரிப்பதற்கும், செலவுகளையும் ஊழலையும் குறைப்பதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது எங்களின் பிரதான நோக்கமாகும். அவ்வாறே தொழில் வல்லுநர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பும் நியாயமற்ற வரிக்கட்டமைப்பை மாற்றியமைப்போம்.
ஒட்டுமொத்த வருவாய் இலக்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நடுத்தர வர்க்கத்தினரின் அதிகப்படியான சுமையை குறைக்கும் எங்களது திருத்தப்பட்ட கட்டமைப்பின் சில குறிப்பிட்ட அம்சங்கள் பின்வருமாறு:
- தனிநபர் வருமான வரி: மாதாந்தம் ரூ. 100,000 வரி விலக்கு வகுதியின் பின்னர், தனிநபர் வருமான வரி 1% இல் தொடங்கி, மாதாந்தம் சுமார் அரை மில்லியன் வருமானம் வரை 24% க்கு மட்டுப்படுத்தப்படும். அதற்கு மேல், அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு தற்போதைய விகிதங்கள் பொருத்தமாக இருக்கும்.
- நிறுவன வருமான வரி: ஏற்றுமதி இலாபங்களுக்கான தற்போதைய 30% விகிதத்தை 6% ஆகக் குறைக்கவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு 15% அடிப்படை அரிப்பு மற்றும் இலாப மாற்றல் (Base Erosion and Profit Shifting) குறைந்தபட்ச மாற்று வரியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
- பெறுமதி சேர் வரி (VAT): வரி வலையமைப்பை விரிவுபடுத்தும் பொருட்டு பொதுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் வரி இணக்கப்பாடு மேம்பட்ட பிறகு, பெறுமதி சேர் வரியை 15% ஆகக் குறைக்க உத்தேசித்துள்ளோம். அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக நுகர்வுப் பொருட்களாக அடையாளம் காணப்பட்ட சில பொருட்கள் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
- சிகரெட் மற்றும் மதுபானங்களுக்கான உற்பத்தி வரி மற்றும் கெசினோக்களுக்கான வரி ஆகியவை வரி குறைப்புகளின் நிதியளிப்புக்காக பயன்படுத்தப்படும்.
- சிரேஸ்ட பிரஜைகள் சேமிப்புக்கு 15% உத்தரவாத வட்டி விகிதம் வழங்கப்படும்.