வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், தற்போதைய சட்டக் கட்டமைப்பின் அமுலாக்கத்தை வலுப்படுத்துவதன் மூலமும் நீதி வழங்கல் துரிதப்படுத்தப்படும். திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கும், நாட்டின் நிர்வாக அமைப்பில் ஊடுருவியுள்ள ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான திட்டம் முக்கிய அம்சமாக இருக்கும். ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்காக அரசியல் தலையீடுகள் இல்லாத சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகத்தை அமைப்பது சட்டத்தின் இலகு திருத்தத்தின் மூலம் அவசர அடிப்படையில் மேற்கொள்ளப்படும். அரச கொள்வனவு வெளிப்படையாகவும், ஊழலற்றதாகவும், திறமையாகவும் இருப்பதை உறுதி செய்ய பொதுக் கொள்வனவு சட்டத்தை நிறைவேற்றுவோம். அனைத்து அரசாங்கக் கொள்வனவுகளும் டிஜிட்டல் தளத்திற்கு மாற்றப்படும்.
நுகர்வோருக்கு சிறந்த தரமான மற்றும் விலையை வழங்க, ஒரு போட்டி சட்டத்தை உடனடியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏகபோக மற்றும் சிலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நடத்தைகளில் மாற்றங்கள் செய்யப்படும்.
அரச நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவோம். அரச செலவுத் திட்டங்கள் மற்றும் கடன் முகாமைத்துவ உத்திகள் அத்துடன் வரி நிர்வாகம் குறித்த முழுமையான வெளிப்பாடு இருக்கும். பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதன் மூலம், அரசாங்கத்தின் அனைத்து வரி மற்றும் செலவு முன்மொழிவுகளின் விரிவான விளக்கம் வழங்கப்படும்.